ஆளுநரை விமர்சிக்க தயங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி? கே.சி. பழனிசாமி

புதன், 25 அக்டோபர் 2023 (12:40 IST)
எடப்பாடி பழனிசாமி பேச்சு பல முன்னாள் அமைச்சர்களின் மீதான வழக்குகளுக்கு அனுமதி கோரி கோப்புகள் ஆளுநரின் கையெழுத்துக்கு இருப்பதால் ஆளுநரை விமர்சிக்க தயங்குகிறாரா? அல்லது மத்திய பாஜகவை எக்காரணம்கொண்டும் எதிர்த்து பேசிவிடக்கூடாது என்று நினைக்கிறாரா? என்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி அவர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''ஆரியம்,திராவிடம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது அந்த அளவுக்கு தனக்கு அறிவு இல்லை. இதுபற்றி பேசிய கவர்னரிடமே விளக்கம் கேட்டுக்கொள்ளுங்கள் என்கிற  எடப்பாடி பழனிசாமி 
பேச்சு பல முன்னாள் அமைச்சர்களின் மீதான வழக்குகளுக்கு அனுமதி கோரி கோப்புகள் ஆளுநரின் கையெழுத்துக்கு இருப்பதால் ஆளுநரை விமர்சிக்க தயங்குகிறாரா? அல்லது மத்திய பாஜகவை எக்காரணம்கொண்டும் எதிர்த்து பேசிவிடக்கூடாது என்று நினைக்கிறாரா?
 
லஞ்சம்,ஊழல்,சட்டம் ஒழுங்கு எல்லா காலத்திலும் எல்லா அரசாங்கத்தின் மீதும் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு தான் ஆனால் சித்தாந்த அரசியலே இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவர்வதற்கும் கட்சியை வலுப்படுத்துவதற்கும் கொள்கைரீதியாக முன்னிறுத்தப்படும்.
 
புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்கள் சட்டமன்றத்தில் #அதிமுக ஒரு திராவிட கட்சி திராவிட சித்தாந்தங்கள் அடிப்படையில் செயல்படும் என்று பதிவுசெய்தார். ஜெயலலிதா அம்மா அவர்கள் தான் பிராமணராக இருந்தாலும் திராவிட கட்சிக்கு தலைமை ஏற்று #திராவிட வழியில் பயணிக்கிறேன் என்று கூறி திராவிட சித்தாந்தங்களின் வழியில் இந்த இயக்கத்தை நடத்தினார். சில நேரங்களில் அந்த சித்தாந்தங்களில் இருந்து விலகிய பொழுது அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது.  
 
இந்த சூழ்நிலையில் சித்தாந்தமே எனக்கு தெரியாது என்று சொல்லுகிறவர் இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர் தானா? அரசியலில் மொத்தமாக பணம் சேர்த்து அதை பங்கிட்டு கொடுப்பதன் மூலமாகவே ஒரு அரசியல் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறாரா?
 
இன்றைக்கு பல குறைபாடுகளை கடந்து திமுகவும்,பாஜகவும் #இந்துத்துவா VS #திராவிடம் என்கிற சித்தாந்த மோதலை முன்வைத்து தமிழக அரசியல் மற்றும் தேர்தல் களத்தை கட்டமைக்கிறார்கள். நாம் பயணிக்கிற பாதை எது என்று தெளிவாக நாட்டு மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் தெரிவிக்கவேண்டிய தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு தனக்கு அவ்வளவு அறிவில்லை அதுகுறித்து ஆராய்ச்சிதான் செய்யவேண்டும் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறவர் தலைமையில் அதிமுக மீண்டும் வலுப்பெறுமா? பாஜகவின் வளர்ச்சியை தடுக்க,திமுகவை எதிர்த்து வெற்றிகொள்ள அதிமுக தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்