நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து அவரை தங்கள் கட்சியோடு கூட்டணி சேர்க்க பாஜக முயன்று வருகிறது. தற்போது பாஜக மற்றும் அதிமுகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கூட ரஜினி அரசியலுக்கு வருவார், ஆட்சி அமைப்பார் என்பது போல தொடர்ந்து பேசி வருகின்றன. சமீபத்தில் நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் ரஜினிதான் அடுத்த முதல்வர் என்று பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நடிகர் ராதாரவி “ரஜினி சூழ்நிலைகளை ஆராய்ந்து பொறுமையாக முடிவு எடுக்கக்கூடியவர். ஆனால் அவர் எடுக்கும் முடிவுகள் தெளிவானதாக இருக்கும். ரஜினி அதிமுக, பாஜக கூட்டணியுடன் இணைந்து கண்டிப்பாக ஆட்சியை பிடிப்பார். ரஜினி முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டால் கண்டிப்பாக அவர் பின்னால் நான் நிற்பேன்” என தெரிவித்துள்ளார்.
எது எப்படியிருந்தாலும் தான் கட்சி தொடங்கி தனித்து போட்டியிட விரும்புவதாகவே ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அப்படி அவர் தனித்து போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு பல இடங்களில் நல்ல ஆதரவு கிடைக்கும், அதேசமயம் வாக்குகளும் பிரியும். அதனால் அப்படிப்பட்ட சங்கடமான நிலை உருவாகிவிடாமல் இருக்க பாஜக இப்போதிருந்தே சிந்தித்து செயலாற்றி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கூட்டணி கட்சிக்கு ஒரு நாயக பிம்பம் கிடைப்பது தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதால் ரஜினியை எப்படியாவது தங்களது கூட்டணியில் இணைத்துவிட பாஜக ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.