நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் அமோக வெற்றி பெற்ற பாஜக, தமிழகத்தில் வலுவான கூட்டணி இருந்தும் மண்ணை கவ்வியது அக்கட்சியின் தலைவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்த தோல்விக்கு அதிமுகவே காரணம் என்பதுதான் பாஜக தலைமையின் எண்ணமாக உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு காட்டிய முக்கியத்துவத்தை மக்களவை தேர்தலில் அதிமுக காட்டவில்லை என்பதால் அதிமுக மீது கடும் அதிருப்தியில் பாஜக தலைமை உள்ளது
எனவே அதிமுக - பாஜக கூட்டணி விரைவில் உடையவிருப்பதாகவும், அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு ஆறு மாதங்கள் குடியரசு தலைவர் ஆட்சியை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆறு மாதங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி அதில் தனியாகவோ அல்லது தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிட பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
இந்த திட்டத்தின்படி அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டால் நிச்சயம் முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது வழக்குகளும் அதிரடி நடவடிக்கைகளும் பாயும் என்பதால் அமைச்சர்கள் தற்போது அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக தனித்தோ அல்லது பிற கட்சியுடனோ கூட்டணி வைத்தாலும் இப்போதைக்கு பெரிய வெற்றியை பெற முடியாது என்றும் தமிழக தலைவரை மட்டும் மாற்றிவிட்டு கட்சியை வளர்த்து சட்டமன்ற தேர்தல் வரும் வரை பொறுமை காக்கலாம் என்றும் பாஜகவில் உள்ள ஒருசில தமிழக தலைவர்கள் மேலிடத்திற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.