அதிமுக பொதுக்குழு கூட்டம் - வானகரத்தில் பலத்த பாதுகாப்பு!!

புதன், 22 ஜூன் 2022 (10:45 IST)
அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

 
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
 
நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடியார் அணி உறுதியாக உள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில் அவர் அனுமதி இன்றி ஒற்றைத் தலைமை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.
 
இந்த விவகாரத்திற்கு நடுவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பி வருவது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓபிஎஸ் கோரிக்கை மனுவை அளித்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை காவல் ஆணையரகம் நிராகரித்துள்ளது. 
 
பொது இடத்தில் கூட்டம் நடந்தால் மட்டுமே அனுமதி தரவோ, மறுக்கவோ முடியும். தனிநபர் கட்டிடத்தில் நடக்கும் கூட்டத்திற்கு காவல்துறை தடைவிதிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஆம், பொதுக்குழு நடைபெறும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலேயே இரும்புத் தகடுகள் அமைத்து போலீசின் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. சென்னை வானகரத்தில் 500-க்கு மேற்பட்ட போலீஸ் பொதுக்குழு நடைபெறும் மண்டபம் முன்பு குவிக்கப்பட்டுள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்