இந்தியா அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றி சாதனை!

செவ்வாய், 28 மார்ச் 2017 (11:35 IST)
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியின் நான்காவது நாளான இன்றே போட்டியை முடிவுக்கு கொண்டு வந்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்து வெற்றி பெற்றது.


 
 
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலியா அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஏற்கனவே நடந்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் ஒரு வெற்றி போட்டியில் வெற்றி பெற்றும், ஒரு போட்டி சமனிலும் முடிந்திருந்தது.
 
இந்நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 332 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ரன்கள் முன்னிலை பெற்றது.
 
இதனையடுத்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 137 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் 32 ரன் முன்னிலை பெற்றிருந்ததால் இந்திய அணிக்கு 106 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பு ஏதுமின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இன்றைய நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. அணியின் எண்ணிக்கை 46-ஆக இருந்த போது 8 ரன்னில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
 
இதனையடுத்து கேப்டன் ரஹானேவும், தொடக்க ஆட்டக்காரர் ராகுலும் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ராகுல் 51 ரன்னுடனும், ரஹானே 38 ரன்னுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 23.5 ஓவரில் 106 ரன்களை இரண்டு விக்கெட்டுகளை இழந்து எடுத்த இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சாதனையை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்