சிறையில் இன்றுடன் ஓராண்டு நிறைவு..! ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் செந்தில் பாலாஜி..!!

Senthil Velan

வெள்ளி, 14 ஜூன் 2024 (14:23 IST)
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த செந்தில்குமார் தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார்.  1994ஆம் ஆண்டு மதிமுக-வில் அரசியல் பயணத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி 1996ல் திமுகவில் இணைந்தார். 
 
ஆனால் அங்கு தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால்  2000ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி   ஜெயலலிதா வீட்டில் அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சேர்ந்த சிறிது நாட்களிலேயே பல பொறுப்புகள் அடுத்தடுத்து வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என தனது அரசியல் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே சென்றார்.
 
2006, 2011, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும் செந்தில் பாலாஜி மீது ஜெயலலிதாவிற்கு அதிருப்தி ஏற்பட்டது. 

இதனால் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவால் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார். மீண்டும் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற நேரத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
இதனையடுத்து அதிமுக உட்கட்சி மோதலால் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர், தினகரனோடு ஏற்பட்ட மோதலால் மீண்டும் திமுகவில் ஐக்கியமானார். செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமையோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அடுத்த சில மாதங்களிலையே திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முக்கிய அதிகார மிக்க நபராக பலம் வந்தார். 

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வெற்று முக்கிய துறையான மின்சாரத்துறையை கைப்பற்றினார். இரண்டு வருடங்களாக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி திடீரென கைது செய்யப்பட்டார். கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அமலாக்கத்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

ALSO READ: ரூ.78 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு.! தமிழக அரசு அறிவிப்பு..!!
 
இந்நிலையில் செந்தில் பாலாஜி, கைதாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு சிறைவாசத்தில் அவருக்கு 38 முறை சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டது. 5 முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 10-ம் தேதிக்கு நடைபெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்