தற்போது கோடைக்காலம் விடுமுறை என்பதால் பலரும் பல ஊர்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். முக்கியமாக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாச ஸ்தலங்களே சுற்றுலா பயணிகளின் முதல் சாய்ஸாக உள்ளது. அந்த வகையில் ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு மலைக்கும் கணிசமான அளவில் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அங்குள்ள சுற்றுலா பகுதிகள் ஒவ்வொன்றும் தொலைவில் உள்ள நிலையில் சொந்த வாகனத்திலோ அல்லது வாடகை வாகனத்திலோ பயணிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் சுற்றுலா வரும் பயணிகளை சுற்றுலா ஸ்தலங்களுக்கு அழைத்து செல்ல போக்குவரத்துக் கழகம் புதிய டூர் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. ஒரு நபருக்கு ரூ.300 செலுத்தினால் போதும். ஏற்காட்டின் முக்கிய சுற்றுலா பகுதிகளான கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சிமுனை, பக்கோடா பாயிண்ட், ரோஸ் கார்டன், ஏற்காடு லேக், அண்ணா பூங்கா, மான் பூங்கா, பொட்டானிக்கல் கார்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்திலேயே அழைத்து சென்று சுற்றி பார்த்துவிட்டு திரும்பி அழைத்து வருவார்கள்.
காலை 8.30 மணி அளவில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் புறப்படும் பேருந்து அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்த பின்பு மாலை 7 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையம் வந்தடையும். இந்த சுற்றுலா பேக்கேஜில் செல்ல விரும்புபவர்கள் TNSTC வலைதளம் மற்றும் செல்போன் செயலி வழியாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.