சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் கவலை இல்லை - அமைச்சர் பாண்டிய ராஜன்
சனி, 25 ஜனவரி 2020 (15:11 IST)
சசிகலா சீக்கிரம் சிறையிலிருந்து வெளிவர வேண்டுமென வேண்டி வருவதாய் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு ஊழல் வழக்கில் சசிகலா சிறை சென்றார். அதற்கு சென்ற பிறகு அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் இரு அணியாக பிரிந்தனர். பிறகு இருவரும் இணைந்து அதிமுகவை ஒரு அணியாக மாற்றினர். அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் பிரிந்து சென்று அமமுகவை உருவாக்கினாலும் தங்களுக்கு அதிமுகவில் ஆள் இருப்பதாகவும், ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும் அடிக்கடி கூறி வருகிறார்.
இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பேட்டிகளில் சசிக்கலாவுக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில் இன்று சசிகலா சிறையில் உள்ளது வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பேட்டியளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”சசிக்கலா சிறையில் இருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. அவர் விரைவில் வெளியே வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. அவர் விடுதலையானால் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.
அதிமுக அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசியிருக்கிறாரே என அதிமுக தரப்பில் கேட்டால் அது அவரது தனிப்பட்ட கருத்து என்று பதில் வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில், சசிகலா குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ;
அதிமுகவில் தலைவர் எதுவும் காலியாக இல்லை;சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக் கவலையும் இல்லை என தெரிவித்தார்.
மேலும், தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டமாக இருந்தாலும் சட்ட ரீதியாக அணுகப்படும் என தெரிவித்தார்.