தீபா முதல்வர்... நான் பொதுச்செயலாளர் - தீபாவின் கணவர் மாதவன் பேட்டி

புதன், 22 மார்ச் 2017 (16:58 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கினார். இதில் நிர்வாகிகளை நியமிப்பதில் கணவர் மாதவனுக்கும், தீபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.


 

 
இந்நிலையில் தீபாவின் பேரவைக்கு மாற்றாக தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அவரது கணவர் மாதவன் அறிவித்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும் கட்சியும், பேரவையும் இணைந்து செயல்படும். தீபாவும், நானும் ஒரே வீட்டில் வசிப்போம் என்றார். ஆனால் தற்போது மாதவன் தீபாவிடம் சண்டை போட்டுவிட்டு பணப்பெட்டியுடன் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. 
 
தீபாவின் பேரவை நிர்வாகிகள் நியமனத்திற்காக, வசூலித்த பணம் தொடர்பாக, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இதனால், பெட்டி ஒன்றுடன் மாதவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் எனவும்,  நிர்வாகிகளிடம் வசூலித்த பணம் மற்றும் ஆவணங்கள் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், இன்று சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
நான் புதிதாக கட்சி தொடங்குகிறேன் என அறிவித்த பின், எனக்கு ஏராளமான மிரட்டல்கள் வருகின்றன. அதுபற்றி போலீசாரிடம் புகார் அளிக்கவுள்ளேன். நான் எந்த பணப்பெட்டியுடனும் ஓடவில்லை. சென்னையில்தான் இருக்கிறேன். நானும் அதிமுக தொண்டனே. எனவே அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு என்னால் போட்டியிட முடியும். யார் மீதும் எனக்கு பயம் இல்லை.  விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வேன்.  நான் தொடங்க உள்ள கட்சிக்கும் தீபாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. தீபாவை முதல்வராக்கியே தீருவேன்” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்