ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் சந்தேகம்: நாஞ்சில் சம்பத் பரபரப்பு தகவல்!

திங்கள், 26 டிசம்பர் 2016 (10:19 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் பலரும் சந்தேகத்தை எழுப்பி வரும் நிலையில் அதிமுக நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக வாட்ஸ்அப்பில் அவரது ஆடியோ ஒன்று வலம்வருகிறது.


 
 
அதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகுவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. ஆனால் அதனை நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் இருந்தே மறுத்தார். இந்நிலையில் நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்று வாட்ஸ்அப்பில் வந்துள்ளது.
 
அதில், ஜெயலலிதா இல்லாத இந்த வெற்றிடத்தை சூன்யமாகப் பார்க்கிறேன். அவரின் வெற்றிடத்தை நிரப்ப முடியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்மங்கள் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
 
75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, அம்மாவை யார் பார்த்தார்கள் என்ற விவரங்கள்கூட தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னால், உடல் பரிசோதனைக்கு என அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
 
நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல் என அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, படிப்படியாக நோய் வந்தது என்று அடுக்கிக்கொண்டே போனார்கள். அதன் பிறகு தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் சரியாக தெரிந்து கொள்கிறார். வழக்கமான உணவை எடுத்துக்கொள்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், திடீரென அம்மா இந்த நிலைக்கு ஏன் ஆளானார் என்பது குறித்து சாதாரண பொதுமக்களுக்கு எழுகின்ற கேள்விகள் எனக்குள்ளும் எழுகின்றன.
 
சிபிஐ விசாரணை வேண்டும் என்று சசிகலா புஷ்பா வழக்கு போட்டிருப்பதன் மூலம்,  உண்மைகள் வருமானால் எனக்கு மகிழ்ச்சிதான் போன்ற தகவல்கள் அந்த ஆடியோவில் உள்ளது. இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்