கோவை கோட்டை புதூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த அப்துல் ஷா என்பவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். அப்துல் ஷா வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அவரது மனைவியும் உடல்நிலை சரியில்லாததால், அவரது மகனும் மகளும் பாட்டி வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னால் அப்துல் ஷா மற்றும் அவரது மனைவி வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அவரது மகனுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளனர். அவரது மகன் ஷாருக்கான் வீட்டிற்கு வந்து பார்த்து, அம்மாவிடம் துர்நாற்றம் குறித்துக் கேட்க, "வீட்டில் எலி செத்துவிட்டது, அதனால் தான் துர்நாற்றம்" என்று கூறியுள்ளார். ஷாருக்கானும் அப்பா தூங்குவதாக நினைத்து சென்றுவிட்டார்.
ஆனால், மறுநாளும் அதிகமாக துர்நாற்றம் வந்தது. இதை அடுத்து, மீண்டும் ஷாருக்கானுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளனர். அதன் பிறகு ஷாருக்கான் வந்து பார்த்தபோது, தந்தை எழுந்திருக்கவில்லை என்று தெரியவந்தது. அதன் பிறகுதான் அவர் அருகில் சென்று பார்த்தபோது, அவர் இறந்துவிட்டார் என்றும், இறந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன என்றும் தெரியவந்தது.
உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அப்துல் ஷாவின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் இறந்தது தெரியாமல் அவரது மனைவி வீட்டிலேயே 5 நாட்களுக்கும் மேலாக வசித்து வந்த நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.