ஜெ.வை சசிகலா இப்படித்தான் ஏமாற்றினார்: போட்டுடைக்கும் பொன்னையன்!

புதன், 4 அக்டோபர் 2017 (16:26 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன.


 
 
சசிகலாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் எதிரான மனநிலையில் அதிமுக நிர்வாகிகள் பலர் வந்துள்ளனர். ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீதே சந்தேகத்தை வைக்கின்றனர் அவர்கள். இந்நிலையில் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது அவரை சசிகலா எப்படி ஏமாற்றினார், அவரது நெட்வொர்க் என்ன என்பதை முன்னாள் அமைச்சர் பொன்னையன் போட்டுடைத்துள்ளார்.
 
அதிமுக செய்தி தொடர்பாளரும், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து அமைச்சரவையில் இடம் பெற்றவருமான பொன்னையன் பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சசிகலா குறித்து பல பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
 
அதிமுகவை தனது கட்டிப்பாட்டில் கொண்டுவர நினைத்தை சசிகலாவின் நெட்வொர்க் குறித்து பொன்னையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், கட்சி நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள் தேர்வு வரை அனைத்திற்கும் தனக்கு வேண்டியவர்களை ஜெயலலிதாவுக்கு தெரியாமல் கொண்டு வந்தார்.
 
சசிகலாவின் நெட்வொர்க்கில் இராவணன், இராமச்சந்திரன், பழனிவேல், கலியபெருமாள் என அவரது சொந்தங்களே இருந்தார்கள். இவர்களைத்தான் தமிழகத்தின் பல பகுதிகளில் நியமித்தார்கள். தவறுகள் ஏதும் நடக்காமல் சூப்பர்வைசிங் செய்து கொள்கிறோம் அக்கா என ஜெயலலிதாவிடம் கூறி சசிகலா ஏமாற்றினார்.
 
ஆட்சியையும், கட்சியையும் சசிகலா பிடிப்பதற்காக சதித்திட்டம் தீட்டியதை உளவுத்துறை மூலம் தெரிந்துகொண்ட ஜெயலலிதா சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தை வீட்டைவிட்டே விரட்டினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அனைவரையும் நீக்கினார்.
 
ஆனால் ஜெயலலிதாவுக்கு இளகிய மனது உண்டு, யார் மன்னிப்பு கேட்டாலும் மன்னிப்பார். அப்படித்தான் சசிகலா எனக்கு அரசியல் ஆசையெல்லாம் கிடையாது உங்களுக்கு உறுதுணையாக பணிவிடை செய்கிற வாய்ப்பை மட்டும் தாருங்கள் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். அதனால் தான் ஜெயலலிதா அவரை மன்னித்தார்.
 
அதன் பின்னர் வீட்டில் உதவியாளராகத்தான் சசிகலா இருந்தார். ஆனால் தினகரன் உள்ளிட்டவர்களை கட்சியின் பக்கமும், கார்டன் பக்கமும் ஜெயலலிதா அனுமதிக்கவே இல்லை என பொன்னையன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்