8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை : உயர் நீதிமன்றம் அதிரடி

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (15:28 IST)
எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த உயர் நீதிமன்றம் திடீர் தடை விதித்துள்ளது.

 
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் 8 வழி விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது.  இந்த சாலை அமைப்பதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  
 
ஆனாலும் இந்த திட்டத்தை அமுல்படுத்த அரசு விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இந்த திட்டத்தின் மூலம் இயற்கை எப்படி அழிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கி, இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பில் சுந்தர்ராஜன் உள்ளிட்ட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கருதிய நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலைக்கு நிலங்கள் கையகப்படுத்தக்கூடாது என தடை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். 
 
இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை செப்.11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்