இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், திடீரென சென்னையில் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருப்பதை அடுத்து, இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவல் படி சென்னையின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதாகவும், இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதை அடுத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை தேனாம்பேட்டை, பாண்டி பஜார், தியாகராய நகர், அண்ணா சாலை, நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து கொண்டிருப்பதாகவும், இன்னும் சில இடங்களிலும் மிதமான மழை பெய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இன்று பிற்பகல் முதல் பெய்யும் என்று ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்திருந்த நிலையில், தற்போது மழை தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.