நாளை முதல் கனமழை மற்றும் மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

Mahendran

திங்கள், 9 டிசம்பர் 2024 (15:39 IST)
நாளை முதல் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை குறித்த எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
 
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு, இன்னும் 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்றும் அதன் பின்னர் டிசம்பர் 11 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தமிழக கடற்கரை ஓர பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை மறுநாள், டிசம்பர் 11 ஆம் தேதி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் பகுதிகளில் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை காண வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்