தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. திருமணம், திரைப்படம் வெளியிடு, அரசியல் கூட்டம் என அனைத்துக்கும் பேனர் வைப்பது வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.
சாலைகளில் பல அடி உயரங்களுக்கு பேனர்கள் வைப்பதால் விபத்துகள் அதிக அளவில் ஏற்படுகிறது. இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருலோக்ஷன குமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது வீட்டுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மனுதாரரின் வீட்டின் முன்பு உள்ள பேனர்களை அகற்ற உத்தரவிட்டார். உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம்பெறக்கூடாது என உத்தரவிட்டார். பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.