தமிழக பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா அவ்வபோது சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை கூறி வைரலாகி வருகிறார். அவர் கடந்த செப்டம்பர் 21ம் தேதி தனது ட்விட்டரில் பதிவொன்றை இட்டிருந்தார். அதில் தனது வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை வளர்த்ததாகவும், அதற்கு வெறி பிடித்ததால் நாய் பிடிப்பவரிடம் சொல்லி அடித்துக் கொன்றதாகவும் பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட் குறித்து தனிநபர் ஒருவர் எச்.ராஜா மீது விலங்குகள் நல வாரியத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து விசாரணை நடத்தி 7 நாட்களில் அறிக்கை சமர்பிக்கவும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.