ஊர்கள், தெருக்கள் பெயர் இனி தமிழில் மட்டுமே – வருகிறது அரசாணை..
புதன், 16 ஜனவரி 2019 (08:44 IST)
தமிழகத்தில் தமிழல்லாதப் பெயர்களில் உள்ள ஊர்கள் மற்றும் தெருக்களின் பெயரைத் தமிழில் மாற்ற விரைவில் அரசாணை வெளியிட இருக்கிறது தமிழக அரசு.
நேற்று பொங்கலன்று சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், நம்ம சென்னை திருவிழா நடைபெற்றது. அதைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய அவர், ‘தமிழகத்தில் பிறமொழிகளில் உள்ள தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயரை தமிழில் மாற்றுவதற்கு விரைவில் அரசு சார்பில் அரசாணை வெளியிடப்படும்’ என்றார்.
தமிழக அரசின் ஆவணங்களில் கிட்டதட்ட 3000 க்கும் அதிகமான ஊர்களின் பெயர்கள் தமிழல்லாத சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில மொழிகளில் இருப்பதாகவும் அவற்றைத் தமிழுக்கு மாற்ற ஒரு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.