ஓ.பி.எஸ்-ஐ உற்சாகப்படுத்திய ஆளுநர் - பின்னணி என்ன?

வியாழன், 16 பிப்ரவரி 2017 (12:00 IST)
தமிழக காபந்து முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கும் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநரிடமிருந்து சாதகமான பதில் வரும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக முதல்வர் ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. முதல்வர் பதவிக்கு குறி வைத்தார் சசிகலா. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமைந்ததால், சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதமும் ஆளுநரிடம் கடந்த 14ம் தேதி சமர்பிக்கப்பட்டது. மேலும், சசிகலாவும் சிறைக்கு சென்றுவிட்டார்.
 
இந்நிலையில், ஆளுநரிடமிருந்து எப்போது அழைப்பு வரும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆவலுடன் காத்திருக்கிறது.  ஏற்கனவே, சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை பெற்றது என்பது உள்ளிட்ட பல புகார்களை ஓ.பி.எஸ் ஆளுநரிடம் கூறிவிட்டு, அவரிடமிருந்து சாதகமான பதில் வரும் என காத்துக் கொண்டிருக்கிறார். தற்போது 11 எம்.பி. மற்றும் 11 எம்.ல்.ஏக்கள் அவர் பக்கம் உள்ளனர். இன்னும் பலர் எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஓ.பி.எஸ் இருக்கிறார்.


 

 
இந்நிலையில், நேற்று எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் பேசிய வித்யாசாகர் ராவ் “எம்.எல்.ஏக்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காத வரை என்னால் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்க முடியாது. ஓ.பி.எஸ் தரப்பினரிடம் பேசி ஒரு உறுதியான முடிவிற்கு வாருங்கள். சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தின் பேரில், எம்.எல்.ஏ-க்களை ஒரு விடுதிக்குள் அடைத்து வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தால், ஆட்சியை கலைத்து விட்டு ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்து விடுவேன். மேலும், அதற்கு காரணமான அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்”என கடுமையாக எச்சரித்துள்ளாராம்.  இதனால், எடப்பாடி தரப்பு அப்செட் ஆகியுள்ளது. 
 
அதேபோல், நேற்று ஆளுனரை ஓ.பி.எஸ் தரப்பும் சந்தித்து பேசியது. அப்போது அவரிடம் கனிவு முகம் காட்டிய ஆளுநர் “நம்பிக்கையுடன் இருங்கள். மத்திய அரசு உங்களுக்கு பலமாகவே இருக்கிறது. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் சூழ்நிலை வந்தாலும், உங்களுக்கே முதல் வாய்ப்பு அளிக்கிறேன். நல்லதே நடக்கும்” என உற்சாகப் படுத்தியுள்ளாராம். இதனால் ஓ.பி.எஸ் தரப்பு மிகுந்த மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிகிறது..
 
தற்போது வித்யாசாகர ராவை மீண்டும் சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி...
 
அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் பரபரப்புடன் பயணிக்கிறது தமிழகம்...

வெப்துனியாவைப் படிக்கவும்