மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் பொதுமக்களும் இடதுசாரி மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் அவருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடிக் காட்டுவது, கோபேக் மோடி ஹேஷ்டேக்கை டிரண்ட் செய்வது என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பாதுகாப்புத் துறை கண்காட்சியை திறந்துவைக்க வந்திருந்த மோடி இத்தகைய போராட்டங்களால் நேரடியாக விமானநிலையத்தில் இருந்து கண்காட்சிக்கு அழைத்து செல்லப்பட்டார். சாலைகளில் கருப்புக்கொடி காட்டிய போராட்டக்காரர்களை அவர் கண்ணில் படாமல் பார்த்துக்கொண்டது ஆளும் அதிமுக அரசு. ஆனால் சமூக வலைதளங்களில் கோபேக் மோடி டிரண்ட் செய்யப்பட்டதும் ராட்சச கருப்பு பலூன்களை வானில் பறக்க விட்டதும் தேசிய ஊடகங்களிலும் செய்தியானது.
இதையடுத்து கேரளா, ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது. இது சமீபத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக வந்த போதும் தொடர்ந்தது. இம்முறை கோபேக் மோடி உலக அளவில் டிரண்ட் ஆனது.
இதையடுத்து தேர்தல் பரப்புரைக்காக பிப்ரவரி 10 ஆம் தேதி மீண்டும் மோடி திருப்பூர் வர இருக்கிறார். அப்போது மீண்டும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடக்கும் என பெரியாரிய உணர்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு முன்னேறிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.