உலகத்தர மருத்துவம் அளிப்பதே நோக்கம் -அடிக்கல் நாட்டு விழாவில் மோடி !

ஞாயிறு, 27 ஜனவரி 2019 (13:44 IST)
மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள தமிழகத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் 1200 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி விழாவில் உரையாற்றினார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் மதுரைக்கு வந்து சேர்ந்தார். தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் அவரை வரவேற்று விழா மேடைக்கு அழைத்து சென்றனர்.

ரிமோட் மூலம் அடிக்கல் நாட்டிய மோடி அதன் பின்னர் ‘ புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ள நகரான மதுரைக்கு வந்துள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.5 கோடிக் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. மொத்தமாக 10 கோடிக் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைய உள்ளன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். பாஜக வின் கடந்த நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில்  எம்.பி.பி.எஸ் இடங்கள் 30 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை 2022 –ல் இருந்து செயல்பட ஆரம்பிக்கும். இங்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிக்கப்படும்’ எனக் கூறினார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வராதது, மேகதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு, ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் பொருளாதார ரீதியிலான 10 % இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி மோடி வருகையின் போது எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டி மதிமுக, திவிக, மே 17 மற்றும் பெரியாரிய இயக்கங்கள் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தன. மேலும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாகக் கருப்பு பலூன்களையும் பறக்க விடப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்