இந்த ஜீபூம்பா வித்தைகள் செங்கோட்டையனுக்கு தெரியுமா..? தங்கம் தென்னரசு கேள்வி!!

வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (10:04 IST)
செங்கோட்டையனுக்கு தன் துறையில் என்ன நடக்கின்றது என்றே தெரியாத வண்ணம் செய்திகள் மறைக்கப்படுகின்றதா? என தங்கம் தென்னரசு கேள்வி. 
 
தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் 1 முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் விருப்ப அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. 
 
இதனைத்தொடர்ந்து அக்டோபர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்த சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் கல்வி அமைச்சரும், எம்.எல்.ஏவுமான தங்கம் தென்னரசு இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்... 
 
தமிழ்நாட்டில் இப்போது பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்த இரண்டே நாட்களில் ‘திடீரென்று’ அது சாத்தியமாகிவிட்டது எனக் கருதும் வகையில், அக்டோபர் 1 ஆம் தேதி 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் செல்லலாம் எனத் தலைமைச் செயலாளர் அறிவித்து இருக்கின்றார்.
 
விருப்பத்தின் பேரில் என்ற வார்த்தைகளின் பின்னால், கொரோனா தொற்று குறையாத நிலையில், நமக்கேன் வம்பு என்று நைசாக ஒதுங்கிக் கொள்ளும் உத்தி ஒளிந்திருப்பதை எவராலும் எளிதாகவே புரிந்துகொள்ள முடியும். அப்படி இரண்டே நாட்களில் சாத்தியமாக்கும் இந்த ஜீபூம்பா வித்தைகள் தெரிந்தவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால், ஒரே நாளில் கொரோனாவை இந்த நாட்டை விட்டே விரட்டி இருக்கலாமே! 
 
அமைச்சர் செய்த அறிவிப்பின் ஈரம் காயும் முன்பே இப்படி ஒரு அறிவிப்பு தலைமைச் செயலாளரால் வெளியிடப்படுகின்றதென்றால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்குத் தன் துறையில் என்ன நடக்கின்றது என்றே தெரியாத வண்ணம் செய்திகள் மறைக்கப்படுகின்றதா? அல்லது பள்ளிக்கல்வித்துறை அதன் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லையா? என கேள்விகளை அடுக்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்