விஷாலே அரசியலுக்கு வரும்போது விஜய் வரக்கூடாதா? – செல்லூரார் ஆதரவு?

வெள்ளி, 12 மே 2023 (16:07 IST)
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவராகவும் இருக்கிறார் விஜய். நடிப்பை தாண்டி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார். விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக பல காலமாகவே பேசப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் அதை நோக்கியே உள்ளதாக தெரிகிறது.

கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக இளைஞர்கள் பலர் பல தொகுதிகளில் வென்றது விஜய் அரசியல் வருகையின் ஆரம்பப்புள்ளியாக கருதப்படுகிறது. அம்பேத்கர் ஜெயந்திக்கு ரசிகர்களை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சொன்னது, பள்ளி மாணவர்களை சந்திக்க உள்ளது என விஜய்யின் செயல்பாடுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர் “இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். விஜய் பல ஆண்டு காலமாக ஏராளமான படங்கள் நடித்து வருகிறார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் கட்சி ஆரம்பித்தால் என்ன தவறு? விஷால் போன்ற சில படங்கள் நடித்தவர்களே அரசியல் ஆசையில் இருக்கும்போது விஜய் தாராளமாக கட்சி தொடங்கலாம்” என பேசியுள்ளார்.

’விஜய் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி உண்டா?’ என செய்தியாளர்கள் கேட்க, அதற்கு செல்லூரார் “அதையெல்லாம் கட்சியின் பொதுச்செயலாளர் அவர்கள்தான் முடிவு செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்