மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசு பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு காணப்பட்வில்லை. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு, காஸிப்புர் மற்றும் திக்ரி பகுதிகளில் இணையதள சேவைகளை முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக டெல்லி - உத்திர பிரதேச எல்லையான காசிப்பூரில் தடுப்புகள் அமைத்து, சாலையில் ஆணிகளை பதித்துள்ளது டெல்லி காவல்துறை. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த ஆணிகள் அடித்த பகுதியில் விவசாயிகள் மலர்களையும் மலர்ச்செடிகளையும் வைத்துள்ளனர்.இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.