இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

Siva

திங்கள், 24 ஜூன் 2024 (21:55 IST)
இப்படிப்பட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயப் புழக்கத்தைக் கண்டித்தும், கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று முக ஸ்டாலின்  ராஜினாமா செய்யக்கோரியும் கள்ளக்குறிச்சியில் அதிமுகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க எத்தனையோ இடையூறுகளை விடியா திமுக அரசு கொடுத்தது. காற்றிற்கு எப்படி தடை போடமுடியாதோ, அதேபோல் மக்களின் உணர்வுகளுக்கு தடைபோட முடியாது முக ஸ்டாலின் அவர்களே! உங்கள் இடையூறுகளைத் தாண்டி மக்களுடன்_அஇஅதிமுக என்றைக்கும் போராடும்!
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் மக்கள் பிரச்சனை இல்லையா? இதனை எடுத்துரைக்க சட்டமன்றத்தில் அனுமதி தரவில்லை. சட்டமும் விதியும் மக்களுக்காக மட்டும் தான் என்பதை அறிக!
 
ஏழை மக்களை காப்பாற்றுவதற்கு பதிலாக,அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தினால் அப்பாவி மக்களின் உயிர்களை இழந்திருக்கிறோம். இப்படிப்பட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.
 
உண்மைகளை மறைப்பது, மடைமாற்ற அரசியல் செய்வது, எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயல்வது போன்றவற்றை விடுத்து, கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்யுங்கள் முக ஸ்டாலின் அவர்களே!
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்