தவெக.. திமுக.. கூட்டணியில் இரண்டு குரல்கள்!. தமிழக காங்கிரஸில் பிளவு ஏற்படுமா?...

BALA

திங்கள், 2 மார்ச் 2026 (11:53 IST)
தமிழக அரசியலை பொறுத்தவரை கடந்த பல தேர்தல்களாகவே திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. ஆனால் திடீரென ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை காங்கிரஸ் வைத்தது. ஒருபக்கம் ஏற்கனவே ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என சொன்ன விஜயின் தவெகவிடம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது.. இது திமுக தரப்புக்கு பிடிக்கவில்லை..

மேலும், தவெக தனித்துப்போட்டியிட்டாலே 18 சதவீத வாக்குகளை பெறும் என தமிழக காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி பேட்டி கொடுதார். ஒருபக்கம் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பதை தொடர்ந்து பேசினார். இப்படி, திமுகவுக்கு எதிராக பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்பி ஆகிய பேசியதற்கு காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காதது திமுகவுக்கு கோபத்தையும், அதிருப்தியையும் கொடுத்தது.

காங்கிரஸில் ஒரு தரப்பு தவெகவுடன் கூட்டணி அமைப்போம் எனவும் ஒரு தரப்பு திமுகவிடம் கூட்டணி அமைப்போம் எனவும் சொல்கிறது. இதில், முடிவு எடுக்கப்படாததால்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. ஆனால், மல்லிகார்ஜுனா கார்கே, சோனியா காந்தி ஆகியோர் ‘திமுகவுடன் நாம் கூட்டணி அமைப்பதே நல்லது’ என சொன்னதால் தற்போது ராகுலும் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது.

காங்கிரஸுக்கு 25 தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா தொகுதியையும் கொடுக்க திமுக முன்வந்திருக்கிறது. ஆனால் இதை ஏற்க முடியாது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று செய்தியாளர்களிடம் சொன்னார். அதோடு தவெகவுக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது எனவும் கூறினார்.. இதுதான் மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. தவெகவை தொடர்ந்து காங்கிரஸ் தரப்பு பெருமையாக பேசி வருவது திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருபக்கம், காங்கிரஸ் திமுக பக்கம் போனால் தமிழக காங்கிரஸில் பிளவு ஏற்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. அதாவது, சிலர் தலைமைக்கு எதிராக தவெக பக்கம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உணர்ந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் எந்த முடிவானாலும் தயாராக இருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்