இரட்டை இலையை கைப்பற்றும் எடப்பாடி? - தினகரன் அதிர்ச்சி

ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (12:05 IST)
தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் மீண்டும் அதிமுகவிடம் விரைவில் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
அதிமுகவிலிருந்து பிரிந்து ஓ.பன்னீர் செல்வத்தினால், அதிமுக கட்சி தனது இரட்டை இலை சின்னத்தை  முடக்கியது. அந்த சின்னம் எங்களுக்கே சொந்தம் என எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் என இரு அணிகளுமே தேர்தல் ஆணையத்தில் மனுக்களும், பிரமாணப்பத்திரங்களையும் தாக்கல் செய்துள்ளது. எனவே, இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்பதில் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது. அதனால், உள்ளாட்சி தேர்தலும் இதுவரை நடைபெறாமல் இருக்கிறது. இரட்டை இலை சின்னம் இல்லையேல் வெற்றி பெற முடியாது என எடப்பாடி தரப்பு கருதுகிறது.
 
அந்நிலையில்தான் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. அதோடு, 90 சதவீத நிர்வாகிகள் எங்கள் பக்கமே இருப்பதால், இரட்டை இலை சின்னத்தை கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி தரப்பு மனு அளித்துள்ளது. மேலும், அக்டோபர் 31ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஒரு பக்கம் தினகரனும், மறுபக்கம் திமுகவும் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், எப்படியேயினும் இரட்டை இலை சின்னத்தை பெற்றே ஆக வேண்டும் என்பதில் எடப்பாடி தரப்பு உறுதியாக உள்ளது. ஏனெனில், இரட்டை இலை கிடைத்துவிட்டால், தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கம் வந்து விடுவார்கள் என எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் கருதுகின்றனர்.
 
மேலும், சமீபத்தில் பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். எனவே, எடப்பாடி தரப்பிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம்  விரைவில் கொடுத்துவிடும் எனத் தெரிகிறது. 
 
இந்த விவகாரம் தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்