அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற வழக்கு தேர்தல் ஆணையத்தின் முன்னிலையில் உள்ளது. இதில் சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி அணியும், எதிராக ஓபிஎஸ் அணியும் லட்சக்கணக்கில் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 10-ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தினகரனின் நியமனம் செல்லாது எனவும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனவும் அவர் இருந்து இடத்தில் வேறு யாரையும் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டாலும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக அவர் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாலும், பலரும் அவரது நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாலும் நிரந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி அணியினர் நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானத்தை அடிப்படையாக வைத்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன், செம்மலை, மாஃபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.