அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திடீரென இன்று டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் டெல்லி சென்றிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய கட்சிகள் கூட்டணி அமைப்பது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தனது கூட்டணியை தொடர்ந்து தக்க வைத்திருக்குமா? அதிமுக மீண்டும் பாஜகவுடன் சேருமா? புதிதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய் யாருடன் இணைவார்? போன்ற பல சந்தேகங்களுக்கு இதுவரை தெளிவான பதில் இல்லை.
இந்நிலையில், டெல்லி புறப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அங்கு பாஜக தலைவர்களை சந்தித்து முக்கிய அரசியல் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.