அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அஜித்குமாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, இன்று சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போதுதான், அஜித்குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார்.
சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மடப்புரம் காவலாளி அஜித்குமாரின் தாயார், சகோதரரை சந்தித்து ஆறுதல் கூறினேன். காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த இந்த சம்பவம் மிகவும் வருத்தத்துக்குரியது. அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என அதிமுக சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. சிபிஐ விசாரிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது," என்று தெரிவித்தார்.
உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அத்துடன், அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அஜித்குமாரின் சகோதரருக்கு அவர் விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.