கொலை பாதகர்கள் வலம் வருவதை தடுக்க முடியாத திமுக ஆட்சி.. ஈபிஎஸ் கண்டனம்..!

Mahendran

திங்கள், 4 நவம்பர் 2024 (14:57 IST)
நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் கொலை பாதகர்கள் வலம் வருவதும், அதை முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
 “சிவகங்கை மாவட்டம், மாத்தூர் ஊராட்சி, அதிமுக நாட்டாக்குடி கிளைச் செயலாளர் ஆர். கணேசன் இன்று (நவ.4) கலை 5 மணியளவில் வழக்கம்போல் தனது பெட்டிக் கடையை திறக்கச் சென்றபோது, அவரை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். நாட்டாக்குடி கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படுகொலையை தடுத்திருக்கலாம்.
 
மேலும், தீபாவளித் திருநாளன்று மாலை 4 மணியளவில் சிவகங்கை, வாணியங்குடியில் உள்ள நாடக மேடையில் மணிகண்டன், அருண்குமார் மற்றும் ஆதிராஜா ஆகியோர் பேசிக்கொண்டிருந்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் அந்த மூவரையும் வெட்டியதாகவும், இதில் மணிகண்டன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இறந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அதே தீபாவளித் திருநாளன்று மற்றொரு நிகழ்வில் சிவகங்கை, களத்தூரில் இரவு 7 மணி அளவில் ஒரு கும்பல் லட்சுமி அம்மாள் என்பவரை வீடு புகுந்து வெட்டிப் படுகொலை செய்துள்ளது.
 
மற்றொரு நிகழ்வில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர 7-வது வார்டு அதிமுக செயலாளர் பி. ரமேஷ் என்பவரை, திமுக நகர மன்ற வார்டு உறுப்பினரின் கணவர் கோவி. சக்தி மற்றும் இரண்டு நபர்கள் நேற்று இரவு (நவ.3) 9 மணியளவில் தேர்தல் முன் விரோதம் காரணமாக ஆயுதங்கள் கொண்டு பலமாக தாக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த ரமேஷ் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அதே போல், அக்.28 அன்று சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் அருகே உள்ள லூப் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த அம்பத்தூரைச் சேர்ந்த கருடகுமார் என்ற 20 வயது இளைஞரை ஒரு கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கியதோடு, அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர். தமிழக கிராமங்களில் உள்ள சிறுவர்கள் ‘கொலை கொலையாம் முந்திரிக்காய் – நிறைய நிறைய சுத்திவா’ என்று பாடித் திரிவதுபோல், தற்போது நடைபெறும் நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் கொலை பாதகர்கள் வலம் வருவதும், அதை முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
 
ஸ்டாலினின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக சிவகங்கை மாவட்டம் அல்ல, தமிழகம் முழுவதும் கடந்த 41 மாத காலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை அனுபவிக்கும் பாலியல் தொல்லைகள், போதைப் பொருள் புழக்கம் போன்ற கொடூரச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன என்று செய்திகள் வருவது வெட்கக்கேடானது.
 
சிவகங்கை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், அதிமுக நிர்வாகிகள் மீது முன்பகையுடன் அவர்கள் தாக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது என்ற நிலையில், எதிரிகளை முன்னெச்சரிக்கையாக கைது மற்றும் எச்சரிக்கை செய்யாத நிலையில், எங்களது கட்சி நிர்வாகிகள் மீது கொலை மற்றும் கொலை வெறித் தாக்குதல்கள் நடந்தேறியுள்ளன.
 
இதற்கு அந்தந்த மாவட்டக் காவல் துறையே பொறுப்பாகும். காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் இனியாவது விழித்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் இதுபோன்ற முன்விரோதத் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்