14 ஆயிரம் கோடி கேட்கும் முதலமைச்சர். என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

வியாழன், 22 நவம்பர் 2018 (09:55 IST)
கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
 
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் மத்திய அரசிடம் நிவாரண நிதி கோர டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க இருக்கிறார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை, கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
 
கஜா புயலால் பேரழிவைக் கண்டுள்ள டெல்டா மாவட்டங்களை சீரமைக்க 14,000 கோடி நிவாரண நிதி கேட்கவுள்ளார் முதலமைச்சர். உடனடியாக 1500 கோடி ரூபாய் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
 
இதுவரை மத்திய அரசிடம் இருந்து கஜா புயலுக்காக எந்த நிதியுதவியும் வராத நிலையில், மத்திய அரசு எவ்வளவு நிதி அளிக்கப்போகிறது என்பது எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த பின்னர் தான் தெரியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்