ஜெ.விற்கு சிகிச்சை அளிக்க மீண்டும் வருகிறார் ரிச்சர்ட் : பரபரப்பு தகவல்

செவ்வாய், 4 அக்டோபர் 2016 (11:39 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், மீண்டும் சென்னைக்கு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  
 
நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், அதை சென்னை மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளால் குணப்படுத்த முடியவில்லை என்பதால், இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ் மருத்துவமனையில் பணிபுரியும் ரிச்சர்ட் ஜான் பீலே என்ற சிறப்பு மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.
 
இவர், தீவிர சிகிச்சை பிரிவிலிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லுனர் ஆவார். அதனால்தான் அவரை வரவழைத்து ஜெ.விற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  அவரின் சிகிச்சைக்கு பின் முதல்வரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. அதன்பின் அவர் லண்டன் திரும்பி விட்டார் என்று தெரிகிறது. அவரின் ஆலோசனைகளை ஏற்று அப்பல்லோ மருத்துவர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், மீண்டும் அவரை சென்னைக்கு திரும்புமாறு, அப்பல்லோ நிறுவனமும், சசிகலா தரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதனை ஏற்று, நுரையீரல் தொடர்பான தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க அவர் இந்த வாரம் தனது மருத்துவர் குழுவுடன் மீண்டும் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்