ஒன்றியம் என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும்… ஆளுநருக்கு கிருஷ்ணசாமி கடிதம்!

வெள்ளி, 25 ஜூன் 2021 (08:30 IST)
சட்டமன்ற அவைக்குறிப்பில் இருந்து ஒன்றியம் என்ற வார்த்தையை நீக்கவேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ‘தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது வேறு; இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் வேறு. இந்திய மக்கள் அனைவரும் நம் மத்திய அரசை, இந்திய மத்திய அரசு என்று அழைக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த காலத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் நம் மத்திய அரசை, இந்திய அரசு, இந்திய மைய அரசு அல்லது இந்திய நடுவண் அரசு என்று தமிழில் அழைத்தார்கள். ஆனால், தற்போது 7 மே 2021 முதல் முதல் இந்திய அரசை வேண்டுமென்றே ஒன்றிய அரசு என்று அழைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் ஒன்றியம் என்ற வார்த்தை ஊராட்சிகளின் தொகுப்பான உள்ளாட்சி அமைப்பைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. இது மத்திய அரசை கொச்சைப்படுத்துகிறது.

21 ஜூன் 2021 ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் எழுதிய உரையை ஆற்றியுள்ளார். ஆளுநர் உரையின் தமிழ் பதிப்பில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பத்திகள் 6,7,9,13,14,15,25,32,34,38,40,56&58-ல் பயன்படுத்தியிருக்கிறார்கள். எங்கும் இந்தியா என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தவில்லை. ஆளுநரின் உரையிலும் தமிழ் பதிப்பில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பார்த்து அதிர்ந்து போனேன்.
தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவைகளின் அனைத்து வடிவங்களும். ஒரு வார்த்தையில் தொடங்குகிறது. அவர்கள் பயன்படுத்தும், ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தை லட்சக்கணக்கான தேசபக்தர்களின் மனதை புண்படுத்துகிறது. இந்த விஷயத்தில், நமது இறையாண்மையுள்ள இந்திய நாட்டை ஒன்றிய அரசு என்பதன் உண்மையான அர்த்தம் மற்றும் இந்த வார்த்தைக்குப் பின்னால் மறைந்திருக்கும் நிகழ்ச்சி நிரல் பற்றிய விவேகமுள்ள தமிழறிஞர்களிடமிருந்து கருத்து பெற ஆளுநருக்குப் பரிந்துரைக்கிறேன். மேலும் ஆளுநர் ஜூன் 2021 சட்டசபை பதிவுகளில் ஆளுநர் உரை உட்பட அனைத்து பதிவுகளிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைச் சட்டமன்றப் பதிவுகளில் இருந்து நீக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்