500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கூட தமிழக அரசிடம் நிதியில்லையா? அண்ணாமலை கேள்வி..!

Siva

வியாழன், 2 ஜனவரி 2025 (07:26 IST)
500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
 
நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் வரவேற்றிருக்கிறார். 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
 
தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது தேர்தல் வாக்குறுதிகளில், சிதிலமடைந்த 10,000 அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் புதிதாகக் கட்டிக் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. 
 
சமீபத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக் கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு?
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்