தினகரன் அணி ஆட்சியமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு?: திவாகரன் பரபரப்பு பேட்டி!

வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (19:13 IST)
ஓபிஎஸ், எடப்பாடி அணி ஒன்றிணைந்ததை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தினகரன் அணியினர் திமுகவின் ஆதரவில் ஆட்சியமைக்க உள்ளதாகவும், அவர்களின் ஆதரவை பெறுவதில் தவறு ஒன்றும் இல்லை எனவும் திவாகரன் கூறியுள்ளார்.


 
 
திமுகவில் இருந்து விலகி சென்ற முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். அவர் திமுக எதிர்ப்பு நிலைபாட்டிலேயே இருந்தார். அவருக்கு பின்னர் வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்தார்.
 
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த போது மைனாரிட்டி திமுக அரசு என மூச்சுக்கு முன்னூறு தடை ஜெயலலிதா திமுகவை விமர்சித்து வந்தார். அவரது மரணத்திற்கு பின்னர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியபோது கூட சசிகலா ஓபிஎஸ் மீது வைத்த குற்றச்சாட்டு அவர் திமுகவோடு கூட்டு வைத்துள்ளார் என்பதே. ஸ்டாலினும், ஓபிஎஸும் சிரித்து பேசியதை சசிகலா விமர்சித்தார்.
 
ஆனால் தற்போது சசிகலாவின் தம்பி திவாகரன் திருமண விழா ஒன்றில் பேசியபோது மக்கள் நலனுக்காக திமுகவுடன் கூட்டு வைப்பதில் தவறு ஒன்றும் இல்லை என கூறியுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
 
ஈரோட்டில் நடந்த திருமண விழா ஒன்றில் பேசிய திவாகரன், மக்கள் நலனுக்காக திமுகவுடன் கூட்டு வைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. தற்போது வரை எங்கள் அணியில் 40 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுகவில் உள்ள 89 எம்எல்ஏக்களின் உதவியுடன் நாங்கள் இந்த அராஜக ஆட்சியை ஒழிக்க உள்ளோம்.
 
திமுக தங்களுக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாததால் அவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவதை ஏற்றால் எந்த தவறும் இல்லை என திவாகரன் பேசியுள்ளார். அதே நேரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களிடம் சில நாட்களில் அரசியல் மற்றம் வரும் பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்