தன்னையும், சசிகலாவையும் அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஒன்றிணைந்த அதிமுக அணி இறங்கியுள்ளதால், அதிருப்தியடைந்த தினகரன் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரை பாண்டிச்சேரி சின்னவீராம் பட்டினத்தில் உள்ள விண்ட் ஃபிளவர் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார்.
மேலும், எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக அவர்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். ஆனால், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை விடுத்தும், சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட முடியாது என ஆளுநர் கூறிவிட்டார்.
எனவே, இன்று காலை டெல்லி சென்ற திமுகவினர் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதேபோல், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேர் நாளை டெல்லி சென்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியசுவாமி “எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக நான் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன். இன்று டெல்லி வந்த திமுக தங்களுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரை உடன் அழைத்து வந்து ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். அது தவறு. அந்த கட்சிகளை விட்டுவிட்டு தினகரனுடன் இணைந்து திமுக ஆட்சி அமைக்க முயற்சி செய்ய வேண்டும்” என கருத்து தெரிவித்தார்.