தமிழகத்தில் சமீபமாக நடந்து வரும் குற்ற சம்பவங்கள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
கடந்த சில காலமாக வெளிப்படையாக சில பகுதிகளில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென அதிமுக கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் மொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “மதுரை பெருங்குடியில் காவலர் கொலை, கோவையில் பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு, ஈரோடு நெடுஞ்சாலையில் ரவுடி ஜான் காரில் சென்றபோது வழிமறித்து கொலை, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் நெல்லையில் வெட்டிக் கொலை, சென்னையில் திமுக நிர்வாகி கடத்தி வெட்டிக் கொலை என நாள்தோறும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கொலைப்பட்டியலை காண்பதே திமுகவின் சாதனையாக உள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பும் நிலை உள்ளது. முதலமைச்சருக்கு கீழுள்ள காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கின்ற அவலநிலை உள்ளது.
எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் நேற்று நடந்த கொலை சம்பவம் குறித்து சட்டசபையில் பேச முயன்றேன். சட்டம் ஒழுங்கு பற்றி பேச அனுமதிக்கவில்லை. அதிமுகவை பொறுத்தவரை தமிழக மக்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற முறையில்தான் செயல்படுகிறது” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K