சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகர் மீது அதிமுக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
சட்டப்பேரவை சபாநாயகராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாவு செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் கொண்டு வந்தனர். இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்த நிலையில் அப்பாவு வெளியேறினார்.
விவாதத்தில் அப்பாவு குறித்து குற்றம் சாட்டிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “நாங்கள் வெளிநடப்பு செய்தால் அப்பாவு எங்களை பார்த்து சிரிக்கிறார், போங்க போங்க என கிண்டல் செய்கிறார்” என கூறியுள்ளார்.
இந்த தீர்மான விவாதத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ”சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததை எண்ணி வருந்தினேன், அப்பாவு கனிவானவர் அதேசமயம் கண்டிப்பானவர். ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர். இவை இரண்டுமே பேரவைக்கு தேவை என்பதை ஏற்றுக் கொள்வீர்கள். இவை இல்லாவிட்டால் பேரவை கண்ணியத்தோடும், கட்டுப்பாடோடும் இருக்காது” என பேசினார்.
தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் அப்பாவு சபாநாயகராக தொடர அதிக ஆதரவு கிடைத்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. மீண்டும் சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவுவே தொடர உள்ளார்.
Edit by Prasanth.K