திமுக பிரமுகர் கொலை வழக்கு: 5 பாஜகவினர் கைது

ஞாயிறு, 17 ஜூலை 2016 (12:47 IST)
அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவர் சீனிவாசன் கொலை வழக்கில் 5 பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவரான திமுகவை சேர்ந்த சீனிவாசனை (45) கடந்த வியாழக்கிழமை மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக பாஜக மாவட்ட ஆதிதிராவிட அணி தலைவர் திருமுகாட்டை சேர்ந்த பெருமாள் (45), அச்சரப்பாக்கம் பாஜக நகர தலைவர் பாலாஜி (50) மற்றும் பாரதீய ஜனதாவை சேர்ந்த படாளம் கார்த்திகேயன் (31), மணப்பாக்கத்தை சேர்ந்த குணசேகரன் என்ற குணா (21), நாகராஜ் (25) ஆகியோரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.  மேலும் தலைமறைவாக உள்ள மறைமலைநகரை சேர்ந்த முரளி, பல கொலை வழக்கில் தொடர்புடைய தாம்பரத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகியோரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலத்தில் கூறுகையில், “அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவரான தி.மு.க.வை சேர்ந்த சீனிவாசன் இருந்தால் எங்களது கட்சியான பா.ஜனதா அந்த பகுதியில் வளரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அச்சரப்பாக்கம் மலை மீது உள்ள கோவிலில் பூசாரியாக இருந்த பாலாஜியை நீக்கி விட்டு வேறு ஒருவரை பூசாரியாக நியமனம் செய்தார். எங்கள் கட்சியை வளர விடாமல் தடுத்து வந்த அவர் எங்களது தொழிலிலும் குறுக்கிட்டு வந்ததாலும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அவரே வெற்றி பெறும் நிலையில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பதாலும் அவரை திட்டமிட்டு கொலை செய்தோம்.” என்றனர். கைதான 5 பேரையும் காவல்துறையினர் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்