பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுக் காரணமாக அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து திராவிடர் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். இதற்கு பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையில் இருந்த சில கருத்து மோதல்கள் காரணமாக சொல்லப்பட்டாலும் அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்ற முடிவு செய்ததால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு.
நினைத்த மாதிரியே 1967 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் நீண்ட நாட்கள் ஆட்சி செய்யாமல் அவர் 1969 ஆம் ஆண்டிலேயேக் காலமானது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டமேயாகும். இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும் அவர் செய்த சாதனைகள் அளப்பரியன. தான் ஆட்சியேறி ஒரு ஆண்டுக்குப் பிறகு விழா ஒன்றில் பேசிய அண்ணா, தான் செய்த சாதனைகள் என சிலவற்றைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
அந்தப் பேச்சின் சுருக்கிய வடிவம்:-
"ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன். இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன்.
* ஒன்று,-சுயமரியாதை திருமணத்துக்குச் சட்டஅங்கீகாரம்.
*இரண்டு,-தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம்.
*மூன்று, -தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அறிவிப்பு.
இதைப் பார்த்துவிட்டுப் பலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இவர்களை விட்டுவைக்கலாமா? ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முடியுமா என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், கலைத்து விட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டுவந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும்.
அந்த அச்சம் இருக்கிற வரையில் , அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்.
அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்”.