ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னையிலும் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற மோசடியில் ரூ. 3.84 கோடி அப்பாவி ஒருவர் இழந்துள்ளதாக தகவல் உள்ளது.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தி மோசடி நடந்திருப்பதாக, போலீஸ் அதிகாரியாக நடித்து செல்போனில் பேசியுள்ளனர். இதனால் அவர் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மிரட்டினர்.
இதனால் தொழிலதிபர் பயத்தில் "மேற்பார்வை கணக்கு" என்ற பெயரில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினார். ரூ.3.84 கோடி அனுப்பிய பின்னரே, அவர் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் வழக்கை விசாரித்து சென்னை காவங்கரையை சேர்ந்த அப்ரோஸ் , திருவள்ளூரை சேர்ந்த லோகேஷ் மற்றும் மாதாங்கி ஹரிஷ் பாபு ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். இதுபோன்ற மோசடிகளிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.