வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறும் எனவும், மார்ச் 27ம் தேதி மனுவை திரும்ப பெறும் நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அந்த தொகுதியில் யார் யாரெல்லாம் போட்டியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையேயும், அரசியல் விமர்சகர்களிடையேயும் இப்போதே எழுந்துள்ளது. ஜெ.வின் மறைவிற்கு பின், அரசியலுக்கு வந்துள்ள அவரது அண்ணன் மகள் தீபா, கண்டிப்பாக நான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் தீபா ஆலோசனை செய்ததாக தெரிகிறது. முடிவில், அவர் ஆர்.கே. நகரில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாகவும், அதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனத் தெரிகிறது.
அதேபோல், சசிகலாவால் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக பதவி ஏற்று, அதிமுகவில் இணைந்திருக்கும் தினகரனும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து அறிவிப்பு நாளை வெளியாகும் எனத் தெரிகிறது.