ஆளுநரையே அலறவிட்ட டெல்டா மாவட்ட மக்கள்: பெரும் களேபரம்

வியாழன், 22 நவம்பர் 2018 (15:06 IST)
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் வாகனத்தை மறித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
 
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.
 
இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண நிதியாக 14,000 கோடி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
 
இந்நிலையில் இன்று தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட அவர் திருவாரூரில் உள்ள கிராமத்திற்கு சென்றார். அங்கு மக்கள் பலர் ஆளுனரின் வாகனத்தை மறித்து தங்களுக்கு தற்பொழுது வரை அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு நிவாரணமும் வழங்கப்படவில்லை என போராட்டம் நடத்தினர்.
 
இதனால் அங்கு சற்றுநேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது. அங்கிருந்த போலீஸார் போராட்டத்தைக் கலைத்து ஆளுனரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதேபோல் மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்