டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் திடீர் பரபரப்பு: 3 பேர் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்!

சனி, 25 மார்ச் 2017 (13:08 IST)
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 12 நாட்களாக மண்டை ஓட்டுடன், கோமனத்துடன் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அறவழியில் போராடி வந்த விவசாயிகளின் இந்த போராட்டத்தில் திடீர் பரபரப்பாக 3 பேர் தற்கொலைக்கு முயன்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.


 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும், வறட்சி நிவாரண நிதி வழங்குதல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த போராட்டத்துக்கு ஆதரவளித்து தென்னிந்திய நடிகர் சங்கம் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்தனர். மேலும் நிதியமைச்சரையும் சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் திடீர் பரபரப்பாக 3 விவசாயிகள் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
 
அவர்களை கீழே இறங்கி வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் கீழே இறங்கி வந்தால் ஒருவேளை டெல்லி காவல்துறை அவர்களை கைது செய்யலாம் என்பதால் போலீஸாருடனும் போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் 3 விவசாயிகளும் கீழே இறங்கி வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்த போராட்டத்தை கைவிடுவதாகவும் அறிவித்துள்ளனர். முன்னதாக ஆம் ஆத்மி கட்சி நடத்திய போராட்டத்தின் போது விவசாயி ஒருவர் அதே மரத்தில் ஏறிதான் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்