தீபா ஆதரவாளர் தொடங்கிய புதிய கட்சி அதிமமுக

புதன், 13 ஜூன் 2018 (17:32 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக உடைந்து பல கட்சிகளாக உருவெடுத்தது. ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்து ஒரே கட்சியாக மாறிவிட்டாலும் டிடிவி தினகரன் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர் தற்போது திவாகரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா ஒரு கட்சியும், அவரது கணவர் ஒரு கட்சியும் தனித்தனியாக ஆரம்பித்தனர். இந்த நிலையில் தீபாவின் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்த பசும்பொன் பாண்டியன் என்பவர் இன்று புதியதாக ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த கட்சியின் பெயர் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் ஆகும். இந்த கட்சியை சுருக்கமாக அதிமமுக என்று அழைக்கப்படுகிறது.
 
இன்று மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் கட்சியை அறிமுகம் செய்த பசும்பொன் பாண்டியன் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''எடப்பாடியின் அரசு பி.ஜே.பி-யின் வழியில் செல்வதால் திராவிட சிந்தனையுள்ள, தமிழ் பற்றுள்ள, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழி வந்த தொண்டர்கள் தவித்துப்போயுள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து உண்மையான அ.தி.மு.க இதுதான் என்பதைக் காட்டுவதற்காக இக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இக்கட்சியின் மாநாடு பிரமாண்டமாக நடைபெறும்'' என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்