பிரிட்டனின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் இனரீதியான காரணங்களுடன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை அளித்த தகவலின்படி, இந்த தாக்குதல் அப்பெண்ணின் இன அடையாளத்தின் காரணமாகவே நடத்தப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாக தாக்கப்பட்ட பெண் மன உளைச்சலுடன் தெருவில் அமர்ந்திருந்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, வால்சால்லின் பார்க் ஹால் பகுதிக்குக்காவல்துறையினர் சென்றபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
விசாரணையை மேற்பார்வையிடும் மூத்த காவல்துறை அதிகாரி ரோனன் டைரர், இது "மிகவும் கொடூரமான தாக்குதல்" என்றும், குற்றவாளியை கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
குற்றவாளியைத் தேடும் முயற்சியில், காவல்துறை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரின் படத்தையும் வெளியிட்டுள்ளது. சம்பவத்தின்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாகச் செயல்பட்டவர்களை கண்டவர்கள், அல்லது சிசிடிவி காட்சிகள் வைத்திருப்பவர்கள் தங்கள் தகவலை வழங்குமாறு பொதுமக்களை காவல்துறை வலியுறுத்தியுள்ளது. குற்றவாளியை விரைவில் காவலில் எடுக்க ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.