சசிகலாவோடு சேர மாட்டேன் - சத்தியம் செய்த தீபா

சனி, 4 பிப்ரவரி 2017 (13:30 IST)
அதிமுக பொதுச்செயாளர் சசிகலாவோடு சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என மறைந்த தமிழக முதல்வர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரின் தோழி சசிகலா, அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின், அவரை முதல்வர் பதவியில் அமர வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால், அவரின் தலைமையை விரும்பாத அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
 
தினமும் ஏராளமான அதிமுகவினர், சென்னையில் உள்ள தீபாவின் வீட்டிற்கு முன் சென்று, அரசியலுக்கு வருமாறு அவருக்கு கோரிக்கை வைத்து வந்தானர். எனவே, அவரும் ஜெ.வின் பிறந்தநாளான வருகிற பிப்ரவரி 24ம் தேதி முக்கிய முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்தார். அந்நிலையில், போயஸ்கார்டன் தரப்பிற்கும் தீபாவிற்கும் இடையே பேச்சு வார்த்தை ஏற்பட்டதாகவும், விரைவில் அவர் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியானது. 
 
மேலும், தீபா எங்கள் வீட்டுப் பெண். அவர் எப்போது வேண்டுமானாலும் போயஸ் கார்டன் வந்து எங்களுடன் இணைவார் என சசிகலாவின் கணவர் நடராஜன் வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
 
இந்நிலையில், தீபா நேற்று தனது விட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்றேன். ஆனால், அனுமதி அளிக்கவில்லை. வெகுநேரம் என்னை காக்க வைத்து அதன் பின் அனுமதி கொடுத்தனர். விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவெடுத்துள்ளேன். நான் அதிமுக தொண்டர்களை சந்திப்பதை அதிகாரத்தில் உள்ள சிலர் தடுக்க முயல்கின்றனர்.  எந்த சூழ்நிலையிலும் நான் சசிகலாவுடன் இணைந்து அரசியல் பணியாற்ற மாட்டேன். வருகிற பிப்ரவரி 24ம் தேதி அன்று என்னுடைய அரசியல் முடிவு குறித்து அறிவிப்பேன்” என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்