பூண்டி ஏரியில் இருந்து 16,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த நிலையில், பால் வியாபாரி ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அவரை பத்திரமாக மீட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பூண்டி ஏரியின் கொள்ளளவு நெருங்கி விட்டதை அடுத்து, தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால், படிப்படியாக உபரி நீர் திறந்து விடும் அளவு அதிகரித்து வருகிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், பூண்டி ஏரியில் இருந்து 16,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை அருகிலுள்ள மணலையில் புதுநகர் என்ற பகுதியில் பால் வியாபாரி சுரேஷ் என்பவர் அருகே ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஆற்றில் ஆர்ப்பரித்த நீரில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் பாதுகாப்பாக மண் திட்டில் ஏறி நின்று கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.