காலதாமதமாகும் 'கஜா' புயல்: நள்ளிரவுக்கு பின்னரே கரையை கடக்கும்
வியாழன், 15 நவம்பர் 2018 (22:21 IST)
வங்கக்கடலில் கடந்த 10ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென புயல் திசை திரும்பியதால் கடலூர் மற்றும் பாம்பன் இடையே இன்று இரவு 8 மணியில் இருந்து 11 மணிக்குள் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நாகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலும் மின்விநியோகம் சற்றுமுன் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி புயலின் வெளிப்பகுதி கரையை தொட்டுவிட்டதாகவும் இதனால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துளள்ளது.
இருப்பினும் புயலின் உட்பகுதி, மையப்பகுதி, ஆகியவை கரையை தொட நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே புயல் கரையை கடக்கும் பகுதியில் உள்ளவர்கள் இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.